மோனி

எது நானோ.. அது நானில்லை…

Archive for கதை

நான் – அவன் – மற்றும் …

4 நாட்கள் விடுமுறை முடித்து
இன்றும் மதியம் லேட்டாய் 12 மணியளவில்
அலுவலகத்தில் நுழையும் முன்பே
பியூன் அறிவழகன் அவசர அவசரமாக ஓடி வந்து சொன்னான்.

சார்! அந்த ஆள் 4 நாளா
தினமும் காலைலயே வந்து
சாயங்காலம் வரைக்கும் காத்துட்டு இருந்துட்டு
பிரகாஷ் இன்னிக்கு வந்துடுவாரா? இப்ப வந்துடுவாரா? ன்னு
உயிரை எடுக்குறான் சார்! .
நீங்க இன்னிக்குதான் வருவீங்கன்னு சொன்னதால
காத்தால 7 மணியிலிருந்து காத்துட்டு இருக்கான்.
கொஞ்சம் என்னான்னு பாருங்க சார்! …
சலிப்போடு சொல்லிவிட்டு நகர்ந்தான்.

நிதானமாய் அவனை மேலும் கீழும் பார்த்தேன்.
என்னை கண்டதும் சிநேகமாய் சிரித்தபடி எழுந்து நின்றான்.
முரட்டு தாடி, அழுக்காய் ஒரு ஜீன்ஸ், கருப்பு கலர் சட்டை.
அவனை கடக்கும் போதே சிகரெட் ஸ்மெல் தூக்கலாக இருந்தது.
தலையாட்டிக் கொண்டே என் கேபினுக்குள் நுழைந்தேன்.

யாராய் இருக்கும்?
யோசித்தபடி ஏ.சி.-யை ஆன் செய்தபடி இருக்கையில் அமர்ந்தேன்.

மனசுக்குள் 4 நாள் விடுமுறையை
அபர்னாவுடனும், அழகுக்குட்டி கீர்த்தி-யுடனும்
அழகாய் அனுபவித்த கொடைக்கானல் நினைவுகள்.
ச்சே! இன்னும் 2 நாள் இருந்துட்டு வந்திருக்கலாம்..

திடீரென அவன் நியாபகம் வர,
கண்ணாடி வழியாக வெளியே பார்த்தேன்.
ஆளைக் காணவில்லை.

அறிவழகன்! அறிவழகன்!!
குரல் கேட்டு பியூன் ஓடோடி வந்தான்.

“யார் அந்த ஆளு?
எதுக்காக என்னை பாக்கணுமாம்?”

தெரியல சார்.
4 நாளா எனக்கு தெரிஞ்சி
ஆபீஸ் வாசல்லதான் இருந்தான்.
டிபன், சாப்பாடுன்னு
சாப்பிடக்கூட போனதா தெரியல.
ஆனா ஓவர் சிகரெட் சார்.
இப்பகூட வெளிய நின்னு
தம்முதான் அடிச்சிட்டு இருக்கான்.

இனம் புரியாமல்
அவன் மேல் ஒரு வெறுப்பு படர்ந்தது.

சரி, சரி.
அவன் வந்தான்னா, வெளியவே நிக்க சொல்லு.
மதியம் 3 மணிக்கு மேலதான் நான் ப்ரீ.
அப்போதான்
அவன பாக்க முடியும்னு சொல்லிடு.

சரி சார்!
சொல்லிவிட்டு அறிவழகன் நகர்ந்தான்.

ஏகப்பட்ட வேலைகள் நிலுவையில் இருந்தாலும்
மனசு இன்னும்
கொடைக்கானலையும், அபர்ணாவையும் விட்டு
வெளியே வர மறுத்தது.
இந்த 1-1/2 வருட மண வாழ்க்கையில்
காலம் எங்களுக்கு தந்த அழகான
அற்புதப் பரிசுதான் கீர்த்திக்குட்டி.
திருமண ஆசையே இல்லாமல் இருந்த என்னை
அப்பா அம்மாவின் அதீத கெஞ்சல்களால்
ஏதோ என
அபர்ணாவை மணந்த போது
ஒன்றும் பிடிபடாமல் தான் இருந்தது மனசு.
அதற்கப்புறம் அபர்ணாவின் அன்பினால்
என் உலகமே அவள்தான் என மாறிப்போனது.
கீர்த்திக்குட்டி வந்தபிறகு
மனசு முழுக்க முழுக்க
அவர்கள் இருவர் மட்டுமே வாழ்க்கை
என மாறிப்போனது.

வேலை பளுவின் மத்தியில்
மறுபடியும் திடீரென அவன் நியாபகம் வர
கண்ணாடி வழியாக வெளியே பார்த்தேன்.
அறிவழகனுக்கு பக்கத்தில் இருந்த
அந்த ஸ்டூலில் அமர்ந்து கையை கட்டிக்கொண்டு
என்னையே பார்த்தக் கொண்டிருந்தான்.
நான் பார்ப்பது தெரிந்ததும் சிநேகமாய் சிரித்தான்.
மொதல்ல இவன் யாரு?
எதுக்காக வந்திருக்கான்?-ன்னு தெரிஞ்சி
அவன அனுப்பிச்சிட்டாதான்
ஆபீஸ் வேலையில கவனம் செலுத்த முடியும்.

அறிவழகன்!
குரல் கேட்டும் வராததால்
பெல்லை பலமாய் அடித்தேன்.
பதறியபடி வந்தான்.
கூப்பிட்டா வர முடியாதோ?
கடிந்து கொண்டே
“அவனை வரச்சொல்லு!”
சலிப்புடன் சொல்லியபடி சிஸ்டமில் மூழ்கினேன்.

சரியாய்
40 -வது வினாடியில்
கதவை தட்டி விட்டு
என் கேபினுள் நுழைந்தான்.

வணக்கம் சார்.
தயங்கியபடி நின்றான்.
ம்ம். உக்காருங்க என்றேன்.
சிநேகமாய் கை நீட்டினான்.
வெறுப்புடன் கை குலுக்கியபோது
உண்மையாகவே அதில் சிநேகம் தெரிந்தது.
உட்காருங்க ..
மௌனமாய் மாறாத அதே சிரிப்புடன்
சீட்டின் நுனியில் அமர்ந்தான்.
மறுபடியும் அவனை மேலும் கீழும் பார்த்தபடியே

ம்ம். சொல்லுங்க என்றதும்..
மாறாத அதே சிரிப்புடன்
மேல் பாக்கெட்டில் தயாராய் வைத்திருந்த
ஒரு விசிடிங் கார்டை நீட்டினான்.
கோவையில் விரல்விட்டு எண்ணக்கூடிய
ஒரு பிரபலமான் பணக்காரரின்
மிகப்பெரும் ******** என்ற Group of Companies-ன்
Owner ஒருவரின் Personal விசிடிங் கார்டு அது.
என்ன விஷயமாய் இருக்கும்?
ஏதாவது சிபாரிசோ?
ஏதாவது வேலை தேடி
நம் கம்பெனிக்கு வந்திருப்பானோ?

மனசுக்குள்
என்னென்னமோ ஓடிக்கொண்டிருந்தது..

ம்ம் சொல்லுங்க என்ன விஷயம்?
ஏதாவது வேலை வேணுமா?
இந்த கார்டு எதுக்கு?
சிபாரிசா?
வரிசையாய் கேள்விகளை எழுப்பினேன்.
அறை முழுவதும் சிகரெட் ஸ்மெல் சூழ்ந்திருந்தது..

சீட்டின் நுனியிலிருந்து
கொஞ்சமும் பின் நோக்கி நகர்ந்து அமராமல்
அதே சிரிப்புடன் சொன்னான்..

அது என் கம்பெனி தான் சார்.
அதோட ஓனர் என் அப்பாதான்..

வாட்ட்ட் ?
அதிர்ச்சியோடு சீட்டை விட்டு எழுந்தேன்.

நீங்க தான் Mr. *******- யா?
ஆமாம் சார் என்றான்(?).

மறுபடியும் குழப்பத்தோடு சீட்டில் அமர்ந்தபடி
நீங்க எதுக்கு என் கம்பெனிக்கு வரணும்.
ஒரு போன் செஞ்சிருந்தா
நானே கார் எடுத்துட்டு வந்திருப்பேனே.
நீங்க எதுல வந்தீங்க?

கேட்டுக்கொண்டிருக்கும் போதே அலுவலகம் வரும் போது
தெரு முனையில் சம்பந்தம் இல்லாமல் நின்று கொண்டிருந்த
Hummer Car நினைவில் வந்தது..

அறிவழகன்!
அவசரமாய் அழைத்தேன்.
கை தானாய் பெல் அடித்தது..
இரண்டுமே என்னையும் அறியாமல்
ஒரே நேரத்தில் செய்திருந்தேன்.

அவசர அவசரமாய்
அறிவழகன் என் அறைக்குள்
அவனை மேலும் கீழும் பார்த்தபடியே நுழைந்தான்.

சொல்லுங்க சார் ..
(என்னையும் அறியாமல் சார் வந்திருந்தது)..
என்ன சாப்புடுறீங்க?
ஹாட் ஆர் கோல்ட்?

அவன் பதிலை எதிர்பாராமல்
அறிவழகன்!
ரெண்டுலயுமே ஒவ்வொன்னு கொண்டு வாங்க..

இப்போது அறிவழகன்
என்னை
மேலும் கீழும் பார்த்தபடியே வெளியேறினான்.

அவன் சிரித்தபடி
அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார்..
எனக்கு ஸ்மோக் பண்ணனும் போலிருக்கு.
நீங்க தப்பா நெனைக்கலைனா…
நாம வெளிய போயி பேசலாமா?
உங்க கிட்ட நான்
ரொம்பவும் பெர்சனலா
ஒரு ஒன ஹவர் பேசணும்..
உங்களால முடியுமா?

வார்த்தைகளில் இருக்கும் பண்பு
என்னை அதிர வைத்தது..
இப்படியும் ஒரு பணக்கார கோடீஸ்வரனா?
மனசுக்குள் ஆச்சர்யத்துடன்
என்னையும் அறியாமல் தலையாட்டினேன்.

நாங்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது
அறிவழகன் ஒரு கையில் குளிர் பானமும்
இன்னொரு கையில் டீ-யுடனும்
பரிதாபமாய் என்னை பார்த்தபடி உள்ளே போனான்.

தெருவில் அவன் தலையை கண்டதும்
விர்ர்ரூம்ம் என Hummer Car ஸ்டார்ட் ஆகும் Sound கேட்டது.
என்னை பார்த்தபடி

உங்க பைக்-லையே போயிடலாமா சார்?
Race Course போயிடலாமா?
கொஞ்சம் ரிலாக்ஸ்-ஆ இருக்கும்.

பதில் எதிர்பார்த்து என் முகத்தையே பார்த்தான்.
தலையாட்டும் முன்பே
Hummer Car சடாரென பக்கத்தில் வந்து Break அடித்து நின்றது…
கோவையில் Hummer Car- ஐ இப்போதுதான் பார்ப்பதை நியாபகம்..
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
காரிலிருந்து ஒரு File மட்டும் எடுத்துக் கொண்டு
டிரைவரிடம் ஏதோ சொன்னான்.
நிதானமாய் கதவை சாத்தி விட்டு வந்து
என் பைக்கில் அமரும் முன்பே
Hummer Car மாயமாகி விட்டிருந்தது.
ஏதேதோ சிந்தனைகளோடு
என் பைக் Race Course நோக்கி போய்க்கொண்டிருந்தது.
View mirror-ல் பார்த்தேன்.
கலைந்த தலை..
அழுக்கு ஜீன்ஸ்..
அயர்ன் செய்து பல நாளான
ஒரு கருப்பு சர்ட்.
முகத்தில்
எப்போதுமே மாறாத அதே புன்னகை.

கொஞ்சம் மெதுவா போங்க சார்.
சிகரெட் பத்த வெச்சிக்கிறேன்..

புரியாமல் அவனை பார்த்தபடியே
பைக்கின் வேகத்தை குறைத்தேன்.

இவன் எதுக்காக என்னை பாக்க வரணும்?
என்ன விஷயமா இருக்கும்?
ஒரு வேலை நம்ம கம்பெனிய
வாங்குற ஐடியா-ல இருக்காங்களோ?
இவன் ஏன் இப்படி ஆள் அழுக்கா திரியிறான்?
ஒரு மணிநேரத்துல
10 சிகரெட்டுக்கும் மேல குடிக்கிறான்.
திமிராவும் தெரியல.
பண்பா பேசுறான்..

“சார் !
அந்த மரத்துக்கு கீழ நிறுத்துங்க சார்..
நிழலா இருக்கு”

குரல் கேட்டு
பைக் தானாக அந்த மரத்துக்கு கீழ் நின்றது.
அருகில் இருந்த
அந்த பெரிய கல்லின் மேல் அமர்ந்தபடி
இங்கெல்லாம் ஒக்காருவீங்களா சார்?
என்றான்.

அருகில் அமர்ந்தபடியே
சொல்லுங்க Mr. ******** .
என்ன விஷயமா என்னை பாக்க வந்தீங்க?
ரொம்பவும் குழப்பமா இருக்கு.
சீக்கிரம் விஷயத்தை சொல்ல முடியுமா?
கெஞ்சுகிறேனோ?
என எனக்கே சந்தேகம் வந்தது.

நிதானமாய் சிகரெட்டை
ஆழமாய் இழுத்தபடி என்னை பார்த்தான்.
முதல் முறையாக
அவன் முகத்தில் சிரிப்பை காணவில்லை.
ஏதோ இனம் புரியாத ஒரு சோகம் தெரிந்தது..
அமைதியாய் கையில் வைத்திருந்த
அந்த File-ஐ என்னிடம் நீட்டினான்..

அவினாசி சாலையில் உள்ள
ஒரு மிகப்பெரிய பிரபலமான
மருத்துவமனையின் கோப்பு அது.
பிரித்தேன்.
இரண்டு வருடங்களாய் Cancer-க்கு எடுக்கும்
எல்லா விதமான treatment களின் விபரங்களும் இருந்தன.
கடைசியாய் இருந்த
ஒரு வாரத்திற்கு முன்பான அவனுடைய
Treatment Aanalysis தாளில் அவனின் ஆயுட்காலம் இன்னும்
10 அல்லது 15 நாட்களுக்குள் முடிந்து விடலாம்
எனத் தெளிவாக இருந்தது.
வயிற்றுக்குள் ஒரு அமிழம் சுரந்தது..

Am very Sorry Mr. ********,
உங்களுக்கு
ஆறுதல் சொல்லலாமா வேண்டாமான்னு கூட
எனக்கு தெரியல.
Anyway ரொம்பவும் வருத்தப்படுறேன்.
ஆனா, நீங்க
எதுக்காக என்னை பாக்க வந்தீங்க?
எதுக்காக இதை
என்கிட்டே கொண்டுவந்து காட்டுறீங்கன்னு
எனக்கு புரியல..

மனசுக்குள்
குழப்பம் கூடிக்கொண்டே போனது..

ஏனோ அபர்ணாவை
உடனே பார்க்கவேண்டும்
போலிருந்தது…

தொடரும்…
(எல்லோரும் போயி
ஒரு தம் அடிச்சிட்டு வாங்க…)

Advertisements