மோனி

எது நானோ.. அது நானில்லை…

Archive for கார்த்தி

நானும், அவனும், அவன் காதலும்…

அவன்
அவளை வெகுவாகவே
நேசித்திருந்தான் போலும்..

அவனுக்கு
கோவிலுக்கு போகும் பழக்கமில்லை.
ஆனாலும்,
அவளை முதன் முதலாய் சந்தித்தப்போது
காதல் கடவுள் வீனஸை
அவள் கண்களில் கண்டதாகவும்,
அவளை தேவதை என்றும் சொன்னான்..

அதுநாள் முதல்
காதல் பித்து தலைக்கேறி விட்டதாகவும்
இனி அவளில்லாமல் அவன் இல்லை என்றும்
புலம்ப ஆரம்பித்தான்..

அவளிடம் பேசுவதற்கான வார்த்தைகளை
நட்சத்திரங்களின் ஒளியிடமிருந்து
தினம் இரவு திருடுவதாகவும்,
அவற்றை தன் வீட்டின் ஆறுபக்கமும்
கண்ணாடியாலான ஒரு தனியறையில்
அவ்வார்த்தைகளை சேமிப்பதாகவும்,
அவ்வார்த்தைகள் கண்ணாடிகளில்
எதிரொலித்து எதிரொலித்து
இன்னும் மெறுகேருவதாகவும் சொன்னான்..

சூரியன் மங்கி கிடந்த
ஒரு மாலை வேளையில்
வெகு எதேச்சையான சமயத்தில்
அவள் பேசிய போது,
கைவசமிருந்த ஒளி வார்த்தைகளை
அவளிடம் உளறி கொட்டியதாகவும்,
அதில் மயங்கி அவள்
அவனை காதலிக்க ஆரம்பித்ததாகவும் சொன்னான்..

பின்
தினம் மாலையில்
அவளை சந்திக்க ஆரம்பித்தாகவும்
எடுத்து போன
ஒளி பொருந்திய வார்த்தைகளை சொல்லி சொல்லி
அவளை
தன் பிடியில் கொண்டு வந்ததாகவும்,
அவ்வார்த்தைகளை
பிரயோகிக்க ஆரம்பித்த பின்,
அவ்வார்த்தைகள்
அவளை சூழ்ந்து கொண்டு
அவளை வசீகரமானவளாக மாற்றின என்றும்,
அதன் பின்
அவள் நிலவாக மாற ஆரம்பித்தாள்

என்றும் கூறினான்..

அவன்
தன்னை மிக நல்லவன் என்றும்,
கண்ணியமானவன் என்றும்,
அவளை தவிர
வேறு எந்த பெண்ணையும்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்றும்,
ஒரு நாளும் அவளுக்கு
வலுக்கட்டாயமாய்
ஒரு முத்தம் கூட தந்ததில்லை
என்றும்,
அவளோடு
எங்கும் மேகங்களில் சுற்றியதுமில்லை என்றும்,
அவளை உண்மையாய் காதலிப்பதாகவும்
சொன்னான்..

ஒருநாள் நடு இரவில்
படப்படப்போடும் அதிர்ச்சி மற்றும்
பயம் கலந்த முகத்தோடும் வந்திருந்த அவன்,
தன் வீட்டின் கண்ணாடி அறை
உடைத்து நொறுக்கப்பட்டு இருப்பதாகவும்,

தான் சேமித்து வைத்திருந்த
ஒளி வார்த்தைகள் களவு போய்விட்டதாகவும்,
தான் நட்சத்திரங்களிடமிருந்து திருடும்
ஒளி வார்த்தைகளை பற்றி
யாரோ நட்சத்திரங்களிடம் சொல்லிவிட்டதாகவும்
சொன்னான்..

மேலும்,
அவன்,
அன்று மாலையில்
அவளுக்காக காத்து இருந்தபோது
அவள் வரவில்லை
என்றும்,
அவளை தேடி அவள் வீட்டிற்க்கே சென்ற போது,
வேறு ஒருவன்
அவ்வார்த்தைகளை கொண்டு
அவளை அழாகாக்கி கொண்டிருந்ததாகவும்,
அவள்
“என்னை மறந்து விடு,
உன்னை விட
ஒளி வார்த்தைகள் தான் எனக்கு பிடித்தமானவை”

என்று சொல்லிவிட்டு
“நீ வாய்ப்புகளை
பயன்படுத்தி கொள்ளவில்லை.
உன் வாய்ப்புகளை
நீ இழந்துவிட்டாய்”

என்று சொல்லி
ஏளனமாக
ஒளி சிதற சிரித்தாள் என்றும்
சொல்லி கதறி அழுதான்..

இனி
காதல் தோல்வியில்
தான் தாடி வளர்க்க போவதாகவும்,
அவளை நினைத்து
கவிதை கிறுக்க போவதாகவும்
சொன்னான்..

நான் அதற்கு

நீ
அவளிடம் அன்பை காட்டாமல்,
உன்
ஒளி வார்த்தைகளை மட்டுமே கொண்டு
மயக்கி வைத்திருந்தாய்.

அவளும்
உன்னை விரும்பவில்லை.
உன்னிடமிருந்த
ஒளி வார்த்தைகளில் மயங்கி கிடந்தாள்.
இது எப்படி காதலாகும் என்றேன்.

டேய்..
இது லவ்வு கெடையாது…
சப்ப லவ்வு..
சப்ப மேட்டரு..” என்று சொல்லியபோது
அவன் கொஞ்சம் தெளிவாயிருந்தான்..

பின்னர் விடியும் வரை
தண்ணியடித்தோம் சைடு டிஷ் ஏதுமில்லாமல்..

ஏனோ
மறுநாள் மதியம்
“நானொரு கோழை”
என்றொரு கடிதம் எழுதி வைத்துவிட்டு..
அவன்
தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது

அவன்
அவளை
வெகுவாகவே நேசித்திருந்தான் போலும்..

Advertisements